Tamilnadu Assembly highlights today: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றியதோடு, பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தவறு செய்யும் காவல்துறையினருக்கு இந்த ஆட்சியில் இடமில்லை
உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும். திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச் சூடுகளும் இல்லை. காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்.
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறையை விமர்சிக்க வேண்டாம். காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும். காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும். அரசின் நோக்கம் குற்றத்தை தடுப்பதே. ஓராண்டில் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டுள்ளோம். இது நம்ம போலீசார் என்ற உணர்வு ஏற்படுள்ளது. குற்றங்களை தடுக்க முன்னுரிமை என அறிவித்து செயல்படுத்துகொறோம்.
விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. விசாரணைக்கு அழைத்து வருவோரை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விசாரணையில் காட்டக்கூடாது. விசாரணைக்காக ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை காவலர்கள் பின்பற்ற வேண்டும்.
புதிய அறிவிப்புகள்
வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் போன்றவர்களின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வர ஒருங்கிணைந்த சுங்கச் சாவடி கண்காணிப்பு மையம் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்படும்.
தீ விபத்தின்போது உயரமான கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், மழை, வெள்ளம் போன்ற அவசர காலங்களில் நீரில் மூழ்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மீட்கவும் நடமாடும் ஆளில்லா விமான அலகு காவல் படைப்பிரிவு ரூ. 1.20 கோடி செலவில் விரிவுப்படுத்தப்படும்.
இளம் மற்றும் முதல் தலைமுறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ’பறவை’ எனும் முன்னோடித் திட்டம் ரூ. 1 கோடியில் செயல்படுத்தப்படும்.
திருட்டு மற்றும் சந்தேகத்திற்கு உள்ளான வாகனங்களைக் கண்காணித்து அடையாளம் காணும் விதமாக ’ஒருங்கிணைந்த வாகன காண்காணிப்பு அமைப்பு’ செயலி ரூ. 2 கோடியில் உருவாக்கப்படும்.
இதையும் படியுங்கள்: காவல்துறைக்கு குட் நீயூஸ்; சட்டப்பேரவையில் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் இதோ…
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நகர ஆணையர்கள் அலுவலகங்களில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.
சட்டப்பேரவை ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்திற்கு பின் கூடிய சட்டப்பேரவையில் இன்றுடன் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில், சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா உட்பட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று வரை 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார்.
முன்னதாக இன்று காலை சட்டப்பேரவை நூற்றாண்டு மலரை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.