புதுடெல்லி: ஆக்ராவின் தாஜ்மகாலில் இனிப்பு வழங்கிய இந்துமகா சபாவினருக்கு தடை விதிக்கப்பட்டது. தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற மகிழ்ச்சியில் இனிப்பு வழங்கப்பட்டது.
முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. இக்கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில், இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதை திறந்து பார்க்க உத்தரவிடக்கோரி, உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியின் பாஜக செய்தித்தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ் என்பவர் தொடுத்த மனு, நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதத்தில், இந்து மகாசபாவினர் நேற்று, தாஜ்மகால் முன் இனிப்பு விநியோகித்தனர். இதைக் கண்ட உத்தரப்பிரதேச போலீஸார் அவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பினர். தாஜ்மகாலில் உள்ள சுற்றுலாவாசிகளுக்கும் இனிப்பு வழங்க முற்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதன்மூலம், உலக அதிசயமான தாஜ்மகாலும் தற்போது இந்துத்துவா கும்பலாம் குறி வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. இதற்கு, முகலாய மன்னரால் கட்டப்பட்ட தாஜ்மகாலில், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது காரணமாகக் கூறப்படுகிறது. தன் மனைவி மும்தாஜின் நினைவாக மன்னர் ஷாஜஹான் இந்த தாஜ்மகாலை கட்டியிருந்தார்.
இதனால், மும்தாஜின் நினைவு தினமும் தாஜ்மகாலில் அனுசரிக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோல், தாஜ்மகால் மீது வழக்கு தொடுக்கப்படுவது முதன்முறையல்ல. இதற்கு முன் 2015 இல் தாஜ்மகாலின் மேடையில் ஆரத்தி எடுத்து தரிசனம் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்காக ஆக்ராவாசிகள் ஏழு பேரால் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் மீதான நோட்டீசுக்கானப் பதிலை ஏற்ற நீதிமன்றம், தாஜ்மகால் ஒரு நினைவுச்சின்னமே தவிரக் கோயில் அல்ல என மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கும் முன்பாக, கடந்த 2000 ஆண்டிலும் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்துத்துவாவினரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இம்மனுவில், கோயில் இருந்ததாகக் கூறி அதற்கான 109 தொல்லியல் ஆதாரங்களும் காட்டப்பட்டிருந்தன. இதன்பிறகும் தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கு உத்தரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.