வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் இரு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் மாப்பிள்ளைகள் தவறுதலாக மணப்பெண்களை மாற்றி தாலி கட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனியில் நிகிதா, கரிஸ்மா ஆகிய இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இதற்காக தங்வாரா போலா, கணேஷ் ஆகிய இரண்டு மாப்பிள்ளைகளை பார்த்து இருவரின் குடும்பத்தாரிடமும் தங்களுடைய எண்ணத்தை சொல்லி திருமண தேதியை குறித்துள்ளனர். அதன்படி இருவருக்கும் இரவு நேரத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மணப்பெண்கள் இருவரும் முகத்தை மறைத்திருப்பது போன்ற ஒரே மாதிரியான உடை அணிந்து மணமேடைக்கு வந்திருந்தனர். அவர்களின் அருகே இரு மாப்பிளைகளும் வந்துநின்றனர். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. நீண்ட நேரமாக மின்வெட்டு சரியாகாததால், என்ன செய்வது என்று குழம்பி இருந்த நேரத்தில் முகூர்த்த நேரம் முடிவதற்குள் தாலி கட்ட புரோகிதர் கோரியுள்ளார். இதனால் மாப்பிள்ளைகள் இருவரும் தங்களுக்கான மணப்பெண்ணை விடுத்து தவறுதலாக மணப்பெண்ணை மாற்றி தாலி கட்டியுள்ளனர். பிறகு அக்னி குண்டத்தையும் சுற்றி வந்துள்ளனர்.
மணப்பெண்களுக்கு மாறி தாலி கட்டிய இவை அனைத்தும் வெளிச்சம் இல்லாததால் யாருக்கும் அதுவரை தெரியவில்லை. தொடர்ந்து புதுமணப்பெண்ணை தத்தமது வீட்டிற்கு மணமகன்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் மணப்பெண் மாறிய விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நடந்த நிகழ்வுகளை புரிந்து கொண்டு இருவீட்டாரும் சமரசம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து இரு மாப்பிள்ளை வீட்டார்கள் மற்றும் மணப்பெண் வீட்டார் புரோகிதரிடம் நடந்தவற்றை கூறி முறையிட்டுள்ளனர். அப்போது அடுத்தநாள் மீண்டும் ஒரு முறை திருமண சடங்குகள் நடைபெற்று சரியான மணபெண்ணுடன் மாப்பிள்ளையை அனுப்பி வைக்கும்படி புரோகிதர் கூறியுள்ளார். இதனால் பிரச்னை முடிவுக்கு வந்தது. ஒரு நல்ல காரியம் நடக்கும்போது மின்தடை ஏற்பட்டால் சகுனமே சரியில்லை எனக் கூறுவது உண்டு. அதுபோல, மின்வெட்டால் நடந்த இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement