இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழும் மும்பையில கடந்த 1993ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 257 பேர் இறந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர் தற்போது பாகிஸ்தான் கராச்சியில் பதுங்கி இருக்கிறார். அங்கிருந்து கொண்டு அவர் மும்பையில் உள்ள தனது கூட்டாளிகளை இயக்கி வருகிறார்.
தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களான லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, அல்கொய்தா ஆகியவற்றுடன் இணைந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுதங்கள் மற்றும் போதைபொருட்கள் கடத்தல், கள்ள நோட்டுக்களை பழக்கத்தில் விடுதல் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மும்பை, நாக்பாடா, சாந்தாகுருஸ், கோரேகான, மும்ரா பரேல், மீராபயந்தர் உள்ளிட்ட 24 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. போரிவிலியில் இடைத்தரகரும், கட்டுமான நிறுவனருமான அஜய் சோகாலியா, மாட்டு இறைச்சி ஏற்றுமதியாளர் பரித்குரோஷி உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கிகள், ரொக்க பணம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததற்கான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பீண்டி பஜாரில் நடந்த சோதனையின்போது தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளர் சோட்டாஷகீலின் உறவினர் சலீம் குரோஷி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் டெல்லி, மும்பை, உள்ளிட்ட இந்தியாவில் முக்கிய நகரங்களில் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது தெரிய வந்தது. தாவூத் இப்ராகிமின் டி.கம்பெனியாக செயல்படும் அவரது கூட்டாளிகள் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள்.தொழில்அதிபர்கள் உள்ளிட்டவர்களை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் முக்கிய நகரங்களில் பல்வேறு இடங்களில் அவர்கள் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த சதி திட்டம் தீட்டப்பட்டு இருந்ததாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றம் சுமத்தி உள்ளது.
இது தொடர்பாக தாவூத்தின் நெருங்கிய கூட்டாளிகளான காஜி அனீஸ், சோட்டா சகீல், ஜாவேத்பட்டேல் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.