திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் முதன்மையானது திருச்சூர் பூரம் விழா. இங்குள்ள வடக்குநாதன் கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மாதமான மேடம் மாதத்தில் இந்த விழா நடைபெறும்.
இந்த விழாவின் சிறப்பு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு அணிவகுப்பது தான். இதனைக் காணவும் பூரம் விழாவில் பங்கேற்கவும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருச்சூர் வருவதுண்டு.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் பூரம் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரளாவின் பெருமையான இந்த விழாவில் இந்த ஆண்டு சுமார் 80 யானைகள் பங்கேற்றன. இன்று இரவு வாணவேடிக்கை நடைபெற உள்ளது. பூரம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை விழாவில் பங்கேற்ற ஒரு யானை, வடக்குநாதன் கோவில் ஸ்ரீமூலம் ஸ்தானம் அருகே வந்தபோது திடீரென மிரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
யானை மிரண்டதை கண்டு திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் அலறினர். இருப்பினும் யானையை பாகன்களும், யானைப்படை வீரர்களும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சங்கிலியால் யானை கட்டப்பட்டு இருந்ததால் வேறு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. தொடர்ந்து யானையை கால்நடைத்துறை டாக்டர்கள் பரிசோதித்தனர்.