திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள நாராயணகிரி பூங்காவில் பத்மாவதி- சீனிவாச பரிணயம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள உற்சவத்தில் முதல் நாளான நேற்று மலையப்ப சுவாமி வாகன மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்று நாராயணகிரி பூங்காவை வந்தடைந்தார். உடன் தேவி, பூதேவி உற்சவ மூர்த்திகள் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, பூங்காவில் மணப்பெண்களை பார்த்து பெருமாள் முதலில் மாலை மாற்றினார். பின்னர் சம்பிரதாயப்படி பட்டுப் புடவைகள், சீர்வரிசை வழங்கி, வேத மந்திரங்கள் முழங்க திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி திருக்கல்யாண சம்மதம் தெரிவித்துக் கொண்டனர்.