திருப்பதி:
திருப்பதி அடுத்த சந்திரகிரி, ஜீவ கோணா பகுதியில் காஞ்சி காமகோடி பீடத்திற்கு சொந்தமான சீனிவாசா சமஸ்கிருத கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் சமஸ்கிருதம் மற்றும் இந்து கலாச்சாரம், பண்பாடு குறித்து படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
அங்கு படிக்கும் மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் செல்போனில் பேச கல்லூரியில் உள்ள நிர்வாகத்திடம் இருந்து செல்போனை வாங்கி தங்களின் பெற்றோர்களிடம் பேசி விட்டு கொடுத்து விட வேண்டும்.
இந்தநிலையில் கல்லூரி விடுதியில் இருந்து நேற்று இரவு 10 மணி அளவில் 17 வயது மாணவிகள் 2 பேரும், 19 வயது மாணவிகள் 2 பேரும் திடீரென காணாமல் போயினர்.
கல்லூரி நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல்போன மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை என தெரிவித்தனர்.
மாணவிகள் அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்றார்களா அல்லது வேறு யாருடனாவது சென்றார்களா? அல்லது கடத்தி செல்லப்பட்டார்களா? என விசாரணை நடந்து வருகிறது.
பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.