திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தாட்டி பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (வயது 34). இவர் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் காவியா (24). இவர் புனேவில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுரேஷ் ரெட்டி காவியாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார்.
காவியாவிடம் சுரேஷ் ரெட்டி தனது காதலைத் தெரிவித்தார். இதற்கு காவியா மறுப்புத் தெரிவித்தார். காவியாவை திருமணம் செய்து கொள்வதாக அவரது பெற்றோரிடம் 2 முறை பெண் கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தாலும், காவியாவிற்கு சுரேஷ் ரெட்டி திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் சுரேஷ் ரெட்டிக்கு காவியா மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பெங்களூரிலிருந்து வீட்டிற்கு வந்த சுரேஷ் ரெட்டி மீண்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று மாலை 3 மணியளவில் காவியாவின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றனர். இதனை கவனித்த சுரேஷ் ரெட்டி காவியா வீட்டிற்கு சென்று அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மீண்டும் வற்புறுத்தினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவியாவை நோக்கி சுட்டார். துப்பாக்கி குண்டு குறி தவறி கட்டிலின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இதனைக் கண்டு திகைத்த காவியா அலறி கூச்சலிட்டார். இரண்டாவது முறையாக காவியாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவரது தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சுரேஷ் ரெட்டியும் தனது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர் அப்போது சுரேஷ் ரெட்டி காவியா இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நெல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து பார்த்தபோது துப்பாக்கியின் மீது மேட் இன் யு.எஸ்.ஏ என இருந்தது.
சுரேஷ் ரெட்டி நண்பர்கள் சிலர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் மூலம் சுரேஷ் ரெட்டிக்கு துப்பாக்கி கிடைத்ததா? அல்லது வேறு ஏதாவது வழியில் துப்பாக்கி வாங்கினாரா என பல்வேறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.