ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம், சில்லாரி கிராமத்தை சேர்ந்த சாதர்வல்லி மாணிக்கம் என்பவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். பத்தாவது நாள் சடங்கில் பங்கேற்க இதே மாவட்டத்தை சேர்ந்த எல்லாரெட்டி கிராமத்தினர் சுமார் 25 பேர் வேனில் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்னர்.
அப்போது, வேன் வேகமாக சென்ற போது ஹுசைன் நகர் ரயில்வே கேட் பகுதியில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் ஓட்டுநரின் அதிவேகமே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த 9 பேரின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதாக நேற்று அறிவித்தார். இதேபோல், தெலங்கானா மாநில அரசும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளது.