தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மக்களை அச்சுறுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘எடிட்டர்ஸ் கில்டு’ அமைப்பு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹோவ் மொய்த்ரா உள்ளிட்டோர் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்தது. அதில், “தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை; எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தது.
ஆனால், இதே வழக்கில் நேற்று ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரினார். இதனை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேச துரோக சட்டப்பிரிவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும், இந்த பரிசீலனை முடிவடையும் வரையில் தேச துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விவரங்களை வழங்குமாறும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM