புதுடில்லி : ‘தேச விரோத சட்டத்திற்கான அரசியல் சாசன தகுதி குறித்து ஆராய நேரத்தை செலவிட வேண்டாம்’ என, உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகமான தேச விரோத சட்டத்தை எதிர்த்து ஏராளமான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து, 10 முதல் விசாரணை நடக்கும்’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்திய தண்டனை சட்டம், 124 ஏ பிரிவு குறித்து மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான குழு மட்டுமே சட்டத்தை மறு ஆய்வு செய்ய முடியும். அதனால், சட்டம் மறுஆய்வு செய்யப்படும் வரை பொறுத்திருக்கும்படியும், சட்டத்தின் தகுதி குறித்து விசாரிக்க நேரம் செலவிட வேண்டாம் எனவும், மாட்சிமைமிக்க உச்ச நீதிமன்ற அமர்வை அரசு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன் இதே வழக்கு தொடர்பாக மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தேச விரோத சட்டத்திற்கு அரசியல் சாசன தகுதி உள்ளதாக, 1962ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
Advertisement