சென்னை: தேவைக்கு அதிகமான சோடியம் ஹைப்போ குளோரைடை பயன்படுத்தி ரூ.1.53 கோடியை திருச்சி மாநகராட்சி வீணடித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோடியம் ஹைப்போ குளோரைடு என்ற வேதிப்பொருள் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கரோனா தொற்று காலத்தில் தமிழகம் முழுவதும் பொது இடங்களை தூய்மைப்படுத்த இந்த சோடியம் ஹைப்போ குளோரைட்தான் பயன்படுத்தப்பட்டது. மேலும், குடிநீரை கிருமிநாசினி செய்யவும் இந்த சோடியம் ஹைப்போ குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீரை விநியோகம் செய்வதற்கு முன்பாக இந்த சோடியம் ஹைப்போ குளோரைடை கொண்டு கிருமிநாசினி செய்யப்பட்ட பிறகுதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதன்படி எந்த அளவு இந்த வேதிப் பொருளை பயன்படுத்த வேண்டும் விதிகள் உள்ளது. தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் விதிகளின்படி நாள் ஒன்று ஓரு மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் சோடியம் ஹைப்போ குளோரைடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், திருச்சி மாநகராட்சியில் 2016 – 17, 2017 – 18, 2018 – 19 ஆகிய 3 ஆண்டுகளில் தேவைக்கு அதிகமாக சோடியம் ஹைப்போ குளோரைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு காலத்தில் 56.62 மில்லியன் லிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரத் துறை விதிகளின்படி 37.11 மில்லியன் லிட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், 19.51 லட்சம் லிட்டர் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1.53 கோடி வீணாக செலவு செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.