திருவனந்தபுரம்:
பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பைஜு பவுலோஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி நடிகர் திலீப் உள்பட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நடிகர் திலீப், வழக்கு விசாரணை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மோகனச்சந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2 வழக்குகளிலும் நடிகர் திலீப்பின் 2-வது மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். எனவே அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
இதற்காக நடிகை காவ்யா மாதவனுக்கு சம்மனும் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
போலீசார் குறிப்பிட்ட இடத்தில் தன்னால் ஆஜராக முடியாது என்றும் ஆலுவாவில் உள்ள தனது வீட்டில் போலீசார் விசாரணை நடத்தலாம் என்றும் காவ்யா மாதவன் தெரிவித்திருந்தார்.
அதன்படி போலீஸ் சூப்பிரண்டு மோகன சந்திரன், துணை சூப்பிரண்டு பைஜு பவுலோஸ் ஆகியோர் நேற்று காவ்யா மாதவன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு பகல் 11 மணிக்கு அவர்கள் விசாரணையை தொடங்கினர். மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் காவ்யா மாதவனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையின் போது, நடிகை தாக்கப்பட்ட வழக்கு மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என காவ்யா மாதவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.