நடிகை பலாத்கார வழக்கு: காவ்யா மாதவனிடம் 6 மணி நேரம் விசாரணை
2017ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பிரபல தென்னிந்திய நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த வழக்கில் திலீப்பின் மனைவி, நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ சமீபத்தில் வெளியானது.
இதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, ஏப்ரல் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். தான் சென்னையில் இருப்பதால் ஆஜராக முடியாது என்றும் 13ம் தேதி தன் வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் போலீஸாருக்கு தகவல் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் காவ்யா மாதவனின் ஆலுவா வீட்டில் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். 11 மணிக்கு தொடங்கிய விசாரணை, 4.40 மணிக்கு நிறைவடைந்தது. போலீசாரிடம் இருந்த வீடியோ, ஆடியோவை அவரிடம் போட்டுக்காட்டி அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை விபரத்தை போலீசார் வெளியிடவில்லை.