புதுடெல்லி: விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ‘நத்திங் போன் (1)’ பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பார்ட்னர்ஷிப் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை கால ஸ்பெஷலாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது நத்திங் நிறுவனத்தின் ‘போன் (1)’. இந்த போன் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங். தொழில்நுட்ப நிறுவனமான இந்நிறுவனம் ஹெட்செட்டை விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், போன் (1) குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் வாக்கில் வெளியிட்டிருந்தது நத்திங்.
இந்நிறுவனத்தை கார்ல் பெய் (Carl Pei) கடந்த 2021-இல் தொடங்கி இருந்தார். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நத்திங் நிறுவனத்தை தொடங்கிய அவர் நிதி திரட்டும் முயற்சியிலும் இறங்கினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உட்பட பல்வேறு பிரபலங்கள் இதில் முதலீட்டாளராக உள்ளனர்.
நத்திங் நிறுவனத்தின் போன் (1) குறித்த விவரம் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருந்தாலும் இந்த போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு நத்திங் OS-இல் இயங்கும் என தெரிகிறது. பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியா எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான சந்தை. இந்தியா மற்றும் உலக அளவில் போன் (1) ஒரே நாளில் அறிமுகமாகும். வடிவமைப்பிலும் புதுமையாக இந்த போன் இருக்கும்” என நத்திங் இந்தியாவின் துணைத் தலைவர் மானு சர்மா தெரிவித்துள்ளார். ஸ்னாப்டிராகன் சிப்செட் இந்த போனில் இடம் பெற்றிருப்பதாக தகவல். விரைவில் இந்த போன் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.