வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ‛நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்’ என மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவரின் வீட்டிற்கும், மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள அவரது சகோதரர் பசில் ராஜபக்சே வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதற்கிடையே பதவி விலகிய மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக மகிந்த ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலைக்கு தப்பி செல்லும் வீடியோவும் வெளியானது. இந்நிலையில் நமல் ராஜபக்சே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம். எனது தந்தை பாதுகாப்பாகவும், குடும்பத்தினருடன் தொடர்பிலும் உள்ளார். எம்.பி., பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகமாட்டார். புதிய பிரதமரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பார்.’ என்றார்.
Advertisement