நீட்டை ஆதரிக்கும் பாஜக-வை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் இந்தி மொழி திணிப்பு குறித்துப் பேசியிருக்கிறார். இந்தியைப் படிக்காதீர் என்கிற அணுகுமுறையினால் தமிழகம் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறியதன் மூலம் தமிழர்களின் உணர்வை அவர் புண்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். நேருவின் உறுதிமொழியால் பெற்ற சட்டப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் பாஜக செயல்பட விரும்புகிறது. பாஜக ஆட்சியைப் பொருத்தவரை இந்தி திணிப்பு தொடர் கதையாக நடந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தியைத் திணித்தார்கள். கடுமையாக எதிர்த்த காரணத்தினால் விலக்கிக் கொண்டார்கள். சமீபத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் சுற்றறிக்கையின் மூலம் அங்கு நடைபெறும் அலுவல் நடைமுறை ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியில் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். இதை அனைத்து கட்சிகளும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லுலு மால்கள் தொடங்குவதை கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவில் லுலு மால் இயங்குவதை மூடிமறைத்து விட்டு தமிழகத்தில் எதிர்ப்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது அவருக்கு இயல்பாக இருக்கிறது.
காங்கிரசையும் திமுக-வையும் அழிகிற நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். கடந்த மக்களவை, சட்டமன்ற, ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்திலும் மக்கள் பேராதரவோடு திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றதையும், பாஜக படுதோல்வி அடைந்ததையும் மூடிமறைத்து அண்ணாமலை பேசுகிறார்.
தோல்வியிலிருந்து பாஜக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிற, நீட்டை ஆதரிக்கிற பாஜகவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.c