மொஹாலி: உளவுத்துறை அலுவலகத்தில் கையெறி குண்டு தாக்குதலை கண்டித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ‛பஞ்சாபின் அமைதியை குலைக்க முயற்சிக்கும் கயவர்கள் தப்ப முடியாது, தண்டிக்கப்படுவர்’ எனத் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மாநில காவல்துறையின் ஒரு பிரிவான உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று (மே 09) இரவு 7:45 மணியளவில் மர்ம நபர்கள் கையெறி குண்டு வீசினர். முதல்கட்ட விசாரணையில் ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்த கையெறி குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து உளவுத்துறை அலுவலகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 11 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ‛மொஹாலியில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பஞ்சாப் போலீசார் விசாரித்து வருகின்றனர். பஞ்சாபின் அமைதியான சூழலை கெடுக்க முயற்சிக்கும் எவரும் தப்ப முடியாது’ என்றார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களின் கோழைத்தனமான செயல் தான் இந்த மொஹாலி வெடிகுண்டு தாக்குதல். பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு அந்த கயவர்களின் ஆசையை நிறைவேற்ற ஒரு போதும் அனுமதிக்காது. எந்த விதமான சூழ்நிலையிலும், பஞ்சாப் மாநில மக்களின் ஒத்துழைப்புடன் பொது அமைதி காக்கப்படும். அனைத்து கயவர்களும் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement