திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் சிலர் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக உளவு துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு கேரளாவில் இருந்து இளைஞர்களை மூளை சலவை செய்து அழைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி 24 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தடியன்டவிட நசீர், தேசத்திற்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டதாகவும், வாலிபர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ. கோர்ட்டு 13 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து தடியன்ட விட நசீர் கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
இதில் தடியன்ட விட நசீர் உள்பட 10 பேருக்கு என்.ஐ.ஏ. கோர்ட்டு வழங்கிய தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது. ஏனைய 3 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்றும், இதன் காரணமாக 3 பேரும் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் கூறியது.