சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆளில்லா விமானமான ட்ரோன்கள் மூலம், இந்திய எல்லைப் பகுதிக்குள் ஆயுதங்களை அனுப்பி தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்வது, ட்ரோன்களில் போதைப் பொருளை அனுப்புவது, இந்திய எல்லைப் பகுதிகளை உளவு பார்ப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது.
ஆனால், எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாகிஸ்தானில் இருந்து பறந்து வரும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதிக்கு பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரோனை பிஎஸ்எப் படையினர் நேற்று சுட்டு வீழ்த்தினர். அந்த ட்ரோனில் வைக்கப்பட்டிருந்த 9 பாக்கெட் ஹெராயின் போதைப் பொருளை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.