பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவம் : சிறப்பு தபால் தலை வெளியீடு
சென்னை: பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவை கவுரவிக்கும் வகையில் தபால் துறை சார்பில் நேற்று சிறப்பு தபால் தலையுடன் கூடிய சிறப்பு 'போஸ்டல் கவர்' வெளியிடப்பட்டது. விழாவிற்கு தலைமை வகித்த, 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், ''சுசீலாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் குடியிருக்கும் தெருவிற்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும்,'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு தற்போது 86 வயதாகிறது. இதுவரை பல மொழிகளில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். காலத்தால் அழியாத பல பாடல்களை, தமிழில் பாடியுள்ளார்.அவரை கவுரவிக்கும் விதத்தில், இந்த தபால் தலை மற்றும் போஸ்டல் கவர் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை விசாகப்பட்டினம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எம்.வெங்கடேஸ்வரலு வெளியிட, எல்.ஆதிமூலம் பெற்றுக் கொண்டார். விழாவில், துணை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்கள் பாலசரஸ்வதி, நாகத்திகுமார், 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தலைமை வகித்து எல்.ஆதிமூலம் பேசியதாவது: பாடகி சுசீலா வாழும் காலத்தில், நாம் வாழ்வதே பெரிய பாக்கியம். மூன்று தலைமுறைக்கு மேலாக, அவரது பாடல்கள் ஒலித்தபடி இருக்கின்றன. அவரது மகுடத்தில், இந்த சிறப்பு தபால் தலை, இன்னொரு வைரக்கல். என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் சார்பில் வேண்டுகோள்… அவருக்கு விரைவில், மத்திய அரசு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும். அதே போல, மாநில அரசு, அவர் வாழும் தெருவிற்கு அவரது பெயரை வைக்கவேண்டும்.இவ்வாறு எல்.ஆதிமூலம் பேசினார்.
பி.சுசீலா நன்றி தெரிவித்து பேசுகையில், ''ஆனந்தத்தில் திளைத்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் என்னை 'அம்மா, அம்மா' என்று சொல்கிறீர்களே… அதுவே எனக்கு மிகப்பெரிய விருது! எனக்கு பத்மபூஷன் விருது கிடைக்க சிபாரிசு செய்தவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதை, இங்கே நன்றியுடன் கூறிக் கொள்கிறேன்,'' என்றார்.