மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான மறைந்த மார்க்கோஸ் மகன் ஜூனியர் மார்க்கோஸ் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதையடுத்து நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ஜூனியர் மார்க்கோஸ், மூன்று கோடிக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் லெனி ரோப்ரெடோ, 1.45 கோடி ஓட்டுகள் பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றி குறித்து ஜூனியர் மார்க்கோஸ் பேசுகையில்,”மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்,” என்றார்.ஜூனியர் மார்க்கோஸ், ஜூன் 30ல் அதிபராக பதவியேற்பார் என, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1986ல் பிலிப்பைன்ஸில் நடந்த மக்களின் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டில் சர்வாதிகாரி மார்க்கோஸின் ஆட்சி, அகற்றப்பட்டது.
ஆட்சியில் இருந்தபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொது சொத்துகளை கொள்ளையடித்ததாக, மார்க்கோஸ், அவர் மனைவி இமல்டா மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1989ல் மார்க்கோஸ் இறந்தார்.தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டி மீது போதை மருந்து கடத்தல் தடுப்பு தொடர்பாக ஏராளமானோரை கொன்றதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
Advertisement