பிளஸ் 2 பாஸ் போதும் டிரோன் பைலட் ஆகலாம் மாதம் ரூ.30,000 சம்பளம்

புதுடெல்லி: ‘பிளஸ் 2 தேர்ச்சி தகுதி, டிரேன் பைலட் வேலை, ஒரு லட்சம் பேருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்’ என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறி உள்ளார். நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியதாவது: ஆளில்லா விமானங்களான டிரோன் துறையை 3 சக்கரங்களுக்கு நாங்கள் முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளோம். முதலில், இதற்கான கொள்கை வகுப்பது. இந்த கொள்கையை எவ்வளவு வேகமாக நாங்கள் அமல்படுத்தப் போகிறோம் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அடுத்தது, ஊக்கத்தொகை வழங்குதல். பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், டிரோன் துறை உற்பத்தி மற்றும் சேவையில் புதிய உத்வேகம் பெறும் என நம்புகிறோம். மூன்றாவதாக, தேவையை உருவாக்குதல். டிரோன்களுக்கான தேவை ஒன்றிய அரசின் 12 அமைச்சகங்கள் மூலம் உருவாக்கப்படும். தற்போதைய நிலையில், டிரோன்களை இயக்குவதற்கான டிரோன் பைலட் வேலைக்கு பிளஸ் 2 படித்திருந்தால் போதும். டிகிரி தேவையில்லை. அத்தகைய நபர்களுக்கு 3 மாதத்தில் பயிற்சி அளிக்க முடியும். பயிற்சி முடிந்ததும், டிரோன் பைலட்டாக வேலை சேர்பவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். எதிர்வரும் ஆண்டுகளில் நமக்கு ஒரு லட்சம் டிரோன் பைலட்கள் தேவைப்படுவார்கள். எனவே, இத்துறையில் அபரிமிதமான வாய்ப்புகள் வரப் போகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.