பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் இசை எனப் பல துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கான 2022-ம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசுப் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், பத்திரிகைத் துறையில் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அட்னான் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் டேவ் மற்றும் மறைந்த டேனிஷ் சித்திக் ஆகியோருக்கு புலிட்சர் பரிசு திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி குறித்து செய்திகள் வெளியிட்டதற்காக இவர்கள் நால்வருக்கும் புலிட்சர் பரிசு வழங்கப்பட உள்ளது.
புலிட்சர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான சன்னா, காஷ்மீரை சேர்ந்தவர். காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தில் கன்வெர்ஜென்ட் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சன்னாவின் படைப்புகள் பலவும், சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது பல பத்திரிகைகளில் ஃபிரீலான்சராக பணியாற்றி வருகிறார். புலிட்சர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இரண்டாவது முறையாக புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் சித்திக் கடந்த ஜூலை மாதம் கண்டஹார் நகரில் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும், தலிபான்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.