சென்னை:
சட்டசபையில் முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
காவல்துறை மானிய கோரிக்கை மீது பேசியதாவது:
மொத்தமுள்ள 78 அறிவிப்புகளில் ஒரு சில அறிவிப்புகளை தலைப்புச் செய்தியாக இங்கே அறிவிக்கிறேன்.
பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் உபயோகம் மற்றும் புழக்கத்தைத் தடுக்கும் வகையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவுடன் இணைக்கப்பட்டு “போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவாக” மறுசீரமைக்கப்படும்.
வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோரை கட்டுக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மாநகரங்களில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நடமாடும் ஆளில்லா விமான அலகு காவல் படைப்பிரிவு விரிவுபடுத்தப்படும்.
சென்னை பெருநகரக் காவலில் 3 வழித்தடங்களில் போக்குவரத்து ஒழுங்கு முறைக் கண்காணிப்பு மண்டலம் அமைக்கப்படும்.
சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும்.
காவல்துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் அனைத்து ஆய்வாளர்களுக்கும் இடர்ப்படி தொகை உயர்த்தி வழங்கப்படும்.
நுண்ணறிவுப் பிரிவில் மற்ற பிரிவினருக்கு வழங்கப்படுவதைப்போல திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆளிநர்களுக்கும் 5 விழுக்காடு சிறப்பு ஊதியம் அளிக்கப்படும்.
காவல் ஆய்வாளர்களுக்கும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 30 லட்சம் ரூபாயிலிருந்து 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் ஆய்வாளர்கள், பெண் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கான பணி வாழ்க்கை சமநிலை குறித்த பயிற்சி “ஆனந்தம்” என்கிற திட்டத்தின் மூலமாக வழங்கப்படும்.
தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு காவல்துறை மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
சமூக ஊடகங்களைக் கண்காணிக்க மாநில காவல் தலைமையகத்தில், சமூக ஊடக மையம் அமைக்கப்படும்.
தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை பணிகளை செவ்வனே மேற்கொள்ள மாநிலத்திலுள்ள 11 காவல் சரகங்களிலும் தலா ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி ஏற்படுத்தப்படும்.
மாநில கணினிசார் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் கணினிசார் குற்றத் தடுப்புப் பிரிவு தலைமையிடக் கட்டடம் கட்டப்படும்.
திருவாரூர் முத்துப்பேட்டையில் மாவட்டம், பாதுகாப்புப் பணிக்கு வரும் காவலர்கள் தங்குவதற்கு 12 கோடி ரூபாய் செலவில் பாளையம் கட்டப்படும்.
கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 203 புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
4,631 காவலர் குடியிருப்புகளில் ஏற்பட்ட பழுதுபார்ப்பு பணிகளுக்காக 20 கோடி ரூபாய் சிறப்பு நிதி நடப்பாண்டில் வழங்கப்படும்.
தொழில்நுட்ப நுண்ணறிவுப் பிரிவில் தரவுகளை சேமித்து வைக்கவும், விரிவாக்கம் செய்யவும் பயன்படும் வன்பொருள் வாங்கப்படும்.
சென்னைத் தலைமை ஆய்வகத்தில் ஆய்வுத் திறனை வலுப்படுத்த எனும் அதிநவீன ஆய்வுக் கருவி வாங்கப்படும்.
காவல்துறைப் பணியாளர்களுக்கு இடர்ப்படி உயர்த்தி வழங்கப்பட்டதைப் போன்று தீயணைப்பு பணியாளர்களுக்கும் இடர்ப்படி உயர்த்தி வழங்கப்படும்.
தீயணைப்புப் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மிகைப்பணி ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம் – அன்னியூர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை, சென்னை புறநகர் மாவட்டம் கொளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ஆகிய 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் 11 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
37 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 50 புதிய நீர்தாங்கி வண்டிகள்.
தீ மற்றும் உயிர் மீட்புப் பணிகளில் புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களை செயல்படுத்தத் தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் ‘தீ ஆணையம்’ ஒன்று புதிதாக அமைக்கப்படும்.