இலங்கையில் நேற்று இரவு போராட்டக்காரர்கள் ஆளும் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளை குறி பார்த்து தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். கொழும்பில் உள்ள முக்கிய தலைவர்களின் வீடுகள் அனைத்தும் தாக்கப்பட்டன.
இதனால் பாதுகாப்பு படையினர் இடையே கடுமையான திணறல் ஏற்பட்டது. கொழும்பில் பிரதமர் மாளிகை எதிரேயும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்து உள்ளனர்.
அவர்களால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் மகிந்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய அடுத்த சில மணி நேரங்களில் பிரதமர் மாளிகை இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
பிரதமர் மாளிகை இல்லம் மிகவும் சொகுசான பங்களாவாகும். என்றாலும் உயிரை கருத்தில் கொண்டு மகிந்த ராஜபக்சே அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார். பலத்த பாதுகாப்புடன் அவரை ராணுவ வீரர்கள் அழைத்து சென்றனர்.
கொழும்பில் அவர் ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அவர் எந்த வீட்டில் இருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
இதற்கிடையே மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினரை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது மகன் நமல் ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது மகள் யசோதா விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது.