”மத வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின் 78 அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அப்போது பேசியவர்,
“பள்ளி, கல்லூரி வளாகங்களில் குட்கா, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். ‘ஒழிப்பு ஒருபுறம்; விழிப்புணர்வு இன்னொருபுறம்’ என்ற வகையில் கஞ்சா ஒழிப்பில் அரசு ஈடுபட்டுள்ளது. மத துவேஷங்களை உருவாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கருத்தியல் சுதந்திரம் அளிக்கப்பட்டாலும், அது அநாகரிகமாக மாறும்போதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இளம் மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ‘பறவை’ எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதேபோல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டறிய ‘பருந்து’ என்ற செயலி உருவாக்கப்படும். காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும். 53 லட்சத்தில் காவலர்களுக்கான ‘மகிழ்ச்சி’ என்ற நலச்செயல்திட்டம் செயல்படுத்தப்படும். மத துவேஷங்களை உருவாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கருத்தியல் சுதந்திரம் அளிக்கப்பட்டாலும், அது அநாகரிகமாக மாறும்போதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM