கடந்த 7-ம் தேதி ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக, ஒரு தம்பதியினர் தங்கள் 10 வயது மகனுடன் ராஞ்சி விமான நிலையம் வந்திருக்கின்றனர். அந்த சிறுவனுக்கு சற்று மனப் பிறழ்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தில் சிறுவன் சற்று பதற்றமாகக் காணப்பட்டிருக்கிறார். அதனால், சிறுவனின் பெற்றோர் அவரை அமைதிப்படுத்தியிருக்கின்றனர். அப்போது சிறுவனின் செயலைக் கண்ட இண்டிகோ நிறுவன ஊழியர் ஒருவர், சிறுவனை விமானத்தில் ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். “உங்கள் மகனை விமானத்தில் ஏற்றினால், மற்ற பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அவரை அழைத்துச் சொல்லுங்கள்!” என அந்த ஊழியர் சிறுவனின் பெற்றோரிடத்தில் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், ஊழியர்களிடம் உள்ளே அனுமதிக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றனர். உடன் அங்கிருந்த பயணிகளும் அவர்களுக்கு ஆதரவாக ஊழியர்களிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், விமான ஊழியர் சிறுவனை விமானத்தில் அனுமதிக்க திட்டவட்டமாக மறுத்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, விமான நிறுவன ஊழியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “அந்த விமான ஊழியரின் இதுபோன்ற நடத்தை சகிப்புத்தன்மை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதை எளிதாகக் கடந்து செல்ல வேண்டியதில்லை! இந்த விஷயத்தை நானே விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறினார்.
மேலும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக தலைவர் அருண் குமார் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம், “இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திடமிருந்து ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை கேட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று உறுதியளித்தார்.