பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக அரசு கட்டிய மிதவை பாலம் மூன்றே நாட்களில் உடைந்ததை மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக 40 விழுக்காடு கமிஷன் பெற்றுக் கொண்டு பாலம் கட்டியிருப்பதாக ரன்தீப் சிங் சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மால்பே கடற்கரையில் ரூ.80 லட்சம் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 100 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் ஒரே நேரத்தில் 100 பேரை தாங்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் மையப்பகுதி கடல் கொந்தளிப்பு காரணமாக சேவை தொடங்கப்பட்ட 3வது நாளே உடைந்தது. மிதவை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த 3வது நாளே உடைந்திருப்பது அதன் கட்டுமானம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மிதவை பாலம் கட்டுமானத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பசவராஜ் தலைமையிலான கர்நாடக பாஜக அரசு 40 விழுக்காடு கமிஷன் பெற்றுக் கொண்டு மிதவை பாலம் கட்டியதே உடைந்து விழ காரணம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா டிவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.