சேலம் தலைவாசல், வீரகனூர் தெற்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரான இவர், கடந்த 2021-ல் 6,500 கி.மீ., தூரம் கொண்ட தெடாவூர் தம்மம்பட்டி சாலையை, ரூ.6,93,70,000 மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்கு டெண்டர் மனு அளித்திருக்கிறார். அதன்மூலம் 2022-ல் இவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் பணியை தொடங்குவதற்கு ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் பணி ஒப்பந்தம் சான்று கேட்டிருக்கிறார். அதற்கு சந்திரசேகரன் பணி ஒப்பந்தத்துக்கு, 0.5 சதவிகிதம் கமிஷன் தொகையாக ரூ.3.50 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பணி முடிந்ததும், 12 சதவிகிதம் கமிஷன் தொகையாக, ரூ.78.53 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர்ராஜ், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதையடுத்து, நேற்று மாலை 3 மணியளவில், ஆத்தூர் பயணியர் மாளிகையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜிடம் ரூ.3.50 லட்சம் பணம் வாங்கியபோது, உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிரிஷ்ணராஜன் தலைமையிலான அதிகாரிகள், சந்திரசேகரன் வீட்டிலும் சோதனை செய்தனர்.
இதேபோல, சேலம் ரெட்டிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஜன்னல் வழியாக வீசப்பட்ட 83,000 ரூபாயைக் கைப்பற்றினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைத் போலீஸாரிடம் கேட்டபோது, “ரூ.3.50 லட்சம் லஞ்சம் பெற்றபோது, உதவி செயற்பொறியளர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்தபோது சேலம் கண்காணிப்பு பொறியாளருக்காக லஞ்சம் பெற்றதாகக் கூறியதால், அவருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது” என்றனர்.