காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “2014- ல் மோடி ஜி இந்தியாவின் பிரதமரானார். அதற்கு முன்னர் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது என்ன பணியை செய்யத் தொடங்கினாரோ, அதையே தற்போது மொத்த இந்தியாவிலும் செய்து வருகிறார். பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என இரண்டு வகையான இந்தியாவை உருவாக்கி உள்ளார். இதற்கு குஜராத் மாடல் என்றும் பெயர் வைத்துள்ளார். கொரொனா நோய்த்தொற்று காலத்தில் குஜராத்தில் மூன்று லட்சம் பேர் இறந்து கிடந்த நிலையில், பிரதமர் மொட்டை மாடியிலிருந்து தட்டுகளில் ஒலி எழுப்பச்சொன்னார்.
பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பால் குஜராத்தில் சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அதற்கு ஈடாக உங்களுக்கு என்ன கிடைத்தது? நல்ல கல்வி அல்லது சுகாதாரச் சேவை என எதுவும் கிடைக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு பழங்குடியினரின் உரிமைகளை பறித்துள்ளது. பா.ஜ.க அரசு உங்களுக்கு எதையும் தராது, உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கும். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது மாதிரியான இரண்டு வகையான இந்தியாவை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை” என்றார்.