போபால்: மந்த்தூரில் மோடி, சவுகான் படங்கள் முன்பாக பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடியதால், நகராட்சி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டம் ஷாம்கரில், மகிஷாசுர மர்தினி தேவி கண்காட்சி நடைபெற்று வருகிறது. விழா மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அமைச்சரின் படங்கள் இருந்தன. அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சியில் பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, உடனடியாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆபாச நடன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆபாச நடனத்தின் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஷாம்கர் நகராட்சி தலைமை அதிகாரி நசீர் அலி கானை, மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நகராட்சி தலைமை அதிகாரி நசீர் அலி கான், ஷாம்கர் அரசு கண்காட்சியில் இசைக்குழு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் நிகழ்ச்சியின் விதிமுறைகளை பின்பற்றாமல், சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார். அதனால் அவர் தனது சொந்த அலுவல் கடமைகளில் அலட்சியத்தைக் காட்டியது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து நசீர் அலி கான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.