புதுடெல்லி: இந்திய விமானப் படையில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சுகோய்-30 ரக விமானங்களை ரஷ்யா தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது இந்திய விமானப் படையில் 272 சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் உள்ளன.
இந்த விமானங்களின் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெங்களூருவில் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) பொருத்தப்பட்டு விமானம் இயக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எச்ஏஎல் நாசிக் மையத்திலும் சுகோய் விமான பாகங்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வகை விமானங்களில் நவீன ரக ஆயுதங்கள் பொருத்துதல், அதிநவீன கருவிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகை மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருந்தது.
இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் இந்தத் திட் டத்தை தற்போது தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் ரஷ்யாவிடமிருந்து மிகவும் முன்னேறிய வகையிலான சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் 12-ஐ இந்தியா வாங்கவிருந்தது. இதுவும் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. ரூ.20 ஆயிரம் கோடியில் இந்த விமானங்கள் வாங்கப்பட விருந்தன.
போர் காரணமாக விமானங்களுக்கான உதிரி பாகங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதும் தாமதமாகி வருகிறது என்று பாதுகாப்புத்துறை தெரிவித்தது.