இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை மகிந்தாவின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு மீது தாக்குதல் நடத்தியதால், இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதாக உடனடியாக அறிவித்தார். மகிந்தா ராஜினாமாவை அறிவித்த நிலையிலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யாததால் , இலங்கையில் போராட்டம் தொடர்ந்து.
இதற்கிடையில், ஆளும் கட்சி எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அமரகீர்த்தி என்பவரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். அவர்கள் மீது எம்பி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் எம்பி அமரகீர்த்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரே தான் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மக்களை கட்டுப்படுத்த, இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் கலவரம் வெடித்துள்ள நிலையில், ராஜபக்சே அருங்காட்சியகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. சமூக வலைதளத்தில் பகிரும் வீடியோக்களில், தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அருங்காட்சியகம் வெளியே கூச்சலிடுவதை காண முடிகிறது.
Rajapaksa Museum in Medamulana has been set fire. #Lka pic.twitter.com/hNQqvDTRM9
— Manjula Basnayake (@BasnayakeM) May 9, 2022
மேலும், இலங்கையில் பல எம்.பிக்களின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தெரிகிறது. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, காஞ்சனா விஜேசேகர, சனத் நிஷாந்த, ரமேஷ் பத்திரன மற்றும் நிமல் லான்சா ஆகிய எம்.பிக்களின் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அவர்களது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மகிந்த கூட்டணியின் முக்கிய தலைவர்கள், பாதுகாப்பான தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அதேபோல், குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ராஜபக்சேவின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல் துறையினர் விரட்டியடித்தனர்.
Mahinda Rajapaksa’s residence in Kurunegala set fire. #Lka pic.twitter.com/47qsZMRrvt
— Manjula Basnayake (@BasnayakeM) May 9, 2022
கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆளும் கட்சி எம்.பி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தை ராணுவம் கட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.