சென்னை: ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி முக்கிய வருவாய் ஆக உள்ளது. உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரியின் அடிப்படையில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1500 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி சமீப காலமாக அதிக சொத்து வரி நிலுவையில் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை மேலும் தொடர ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேல், சொத்து வரி செலுத்தாமல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பெரும்பாலனோர் பாக்கி வைத்துள்ளனர். அதன்படி, 110 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி உள்ளது. இந்த சொத்து வரி பாக்கி குறித்த விபரங்களை அளிக்கும்படி, மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சொத்து வரி செலுத்தாத ஓட்டல்கள், திருமண மண்டபம், திரையங்கம் உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.