புதுடெல்லி: “பொதுமக்களின் வளர்ச்சித் திட்டங்களில் ‘கமிஷன்’ கேட்காதீர்கள்” என பாஜக எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். இதன் மீதானப் புகார்களில் தான் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி லலித்பூரின் பாஜக கூட்டத்தில் உரையாற்றினார். இதில், அவரது கட்சியின் மாநில எம்எல்ஏ, எம்பி மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி கூறுகையில், ”கமிஷன் எனும் பெயரில் நம் எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் பெறுவதை முதலில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் மட்டத்தில் நாம் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இந்த தகவல் முதலில் நம் கட்சியினர் இடையே செல்வது அவசியம். மக்களின் பிரதிநிதிகளான உங்களுக்கு அவர்களிடம் லஞ்சம் கேட்க எந்த உரிமையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் யோகி, தனது இரண்டாம் முறை பதவிக் காலத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்பதாக உறுதி அளித்திருந்தார். இதன் வெளிப்பாடாகவே அவரது இந்த உரை இருந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் அரசு திட்டங்களை அமலாக்க அம்மாநில அரசின் சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக முதல்வர் யோகியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் யோகி முதலில் புகார் அளிப்பவர்கள் சரியாக இருந்தால் தாம் அதிகாரிகளை சரிசெய்வதாகவும் பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர் தனது கருத்தை முதன்முறையாக வெளிப்படையாக மேடையிலும் பேசியுள்ளார். இதுபோன்ற புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வர் யோகி தனது அமைச்சர்களில் சிலரையும் குழுவாக அமர்த்தியுள்ளார்.
லலித்பூரின் கூட்டத்தில் மேலும் பேசிய முதல்வர், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பிசிஎஸ் அதிகாரிகள் தமது மற்றும் தம் குடும்பத்தாரின் சொத்து விவரங்களை வெளியிடவும் வலியுறுத்தினார். இதேபோல், தம் அமைச்சர்களும் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை பொதுமக்களும் காணும் வகையில் இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லலித்புரில் முதல்வர் யோகியின் இந்த உரையை கேட்டு அரங்கிலிருந்த பாஜகவினர் அதிர்ச்சியில் மிகவும் அமைதியாகிவிட்டனர்.