சென்னை: விசாரணை கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. லாக்அப் மரணங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்றும், இன்றும் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சியின் கடந்த 2 ஆண்டுகளில் 16 போலீஸ் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு. ஆனால் திமுக ஆட்சியில் அது போன்ற சூழ்நிலைகள் ஏற்படவில்லை. காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக சில விளக்கங்களை திறந்த மனதோடு குறிப்பிட விரும்புகிறேன். 2017 ஆம் ஆண்டு 8 பேரும், 2018 ஆம் ஆண்டு 12 பேரும், 2019 ஆம் ஆண்டு 11 பேரும், 2020 ஆம் ஆண்டு 6 பேரும், 2021 ஆம் ஆண்டு 5 பேரும், 2022 ஆம் ஆண்டு 4 பேரும் காவல் நிலையத்தில் மரணம் அடைந்து உள்ளனர்.
விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. காவல் துறையினர் இது போன்ற சம்பங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். விசாரணைக்கு அழைத்து வருவோரை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. விசாரணைக்காக ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை காவலர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விசாரணையில் காட்டக்கூடாது.
குற்றவாளிகளை திருத்தும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட வேண்டும். கொடிய குற்றம் செய்பவர்கள் எளிதில் பினையில் வெளிவராத வகையில் சட்டப் பிரிவில் கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உரிய வழிகாட்டுதல் படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் புலன் விசாரணை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுகளை நாங்கள் பிறப்பித்து உள்ளோம்.
காவல் நிலையத்தில் குற்றவாளிகயை கையாளுவது குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது நடந்துள்ள லாக்அப் மரணங்களில் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மன்ற உறுப்பினர்கள் அறிவீர்கள். இந்த அரசு எதையும் மறைக்க முடியவில்லை. லாக்அப் மரணங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.