மும்பை,
15-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 3 கோல்டன் டக்-கும் அடங்கும்.
தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லதீப் பேசியுள்ளார்.
கோலி குறித்து அவர் கூறுகையில், “நான் இதை முன்பே சொன்னேன். அவர் டாப் ஆர்டரில் பேட் செய்ய வேண்டும் அல்லது கீழே இறங்கி பேட் செய்ய வேண்டும். தொடக்க வீராக களமிறங்கியது அவருக்கு கைகொடுக்காததால் அவர் இப்போது தனது பேட்டிங் ஆர்டரில் கீழே இறங்கலாம்.
ஆனால் அவர் இப்போது அவர் தனது சொந்த திறமையை சந்தேகிக்கிறார். அது அவருக்கு வேலை செய்யாது. அவர் தனது பேட்டிங் ரிதம்-யை ஒருமுறை கண்டு அறிந்துவிட்டால் அதன்பின் அவர் மோசமான ஃபார்மில் இருந்து வெளியே வந்துவிடுவார்” என ரஷீத் லதீப் தெரிவித்தார்.