சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 22வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இதுவே இந்த தொடரின் கடைசி அமர்வாகும். இன்றைய அமர்வில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன், “வெளிநாடு வாழ் தமிழர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஒரு தெளிவான வரையறையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கொரோனா காலத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லத்திற்தே சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல, ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு இருக்கும் இடத்தில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்குகளிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற தனது துறை சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.