திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா வைரஸ் பரவுகிறது. மலப்புரம் மாவட்டத்தில் இந்த நோய் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அசுத்தமான தண்ணீர் மற்றும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் ஷிகெல்லா பாக்டீரியா பரவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் 6 பேருக்கு ஷிகெல்லா பரவியது. பின்னர் இந்த நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்த தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி அங்குள்ள ஒரு பேக்கரியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவி சாப்பிட்ட ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாணவியுடன் அதே பேக்கரியில் ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில் மலப்புரம் மாவட்m கொண்டோட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் உள்பட 3 பேருக்கு ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். ஷிகெல்லா பரவுவதை தொடர்ந்து மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறி உள்ளார்.