வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ட்ரோன் உற்பத்தி மற்றும் சேவைத் துறை எதிர்காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட துறையாக மாறும். இன்று 12வது முடித்து பயிற்சி பெறும் ட்ரோன் பைலட்கள் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெற முடியும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
நிடி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ட்ரோன் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் சிந்தியா பேசியதாவது: ட்ரோன் துறையின் எதிர்காலம் மிகப்பெரியதாக இருக்கும். உற்பத்தித் துறையில், ரூ.5,000 கோடி முதலீடுகள் மற்றும் 10,000 வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம். ட்ரோன் சேவைத் துறையை ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலானதாக மாற்ற முயற்சிக்கிறோம். இன்று ஒரு ட்ரோன் பைலட் எந்த பட்டப்படிப்பும் இன்றி பயிற்சி பெற முடியும். 12ம் வகுப்பு முடித்திருந்தால் போது. பயிற்சி முடிந்த இரண்டு, மூன்று மாதங்களில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேரலாம்.
விவசாயம், சுரங்கம், பாதுகாப்பு, ஊடகம் மற்றும் பல துறைகளில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அத்துறைகளில் ட்ரோன்கள் பயன்பாட்டுக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். பழைய ஆளில்லா வான்வழி அமைப்பு விதிகள் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டி உள்ளது. ட்ரோன் விதிகள் 2021ல் ஏராளமான படிவங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை நீக்கி விரைவான செயல்முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது இறுதியானது அல்ல. ஆரம்பம் தான். நாட்டின் வான்வெளிக்கான வரைபடம் உருவாக்கும் திட்டமும் உள்ளது. அது கடினமான பணி. இவ்வாறு கூறினார்.
Advertisement