புதுடெல்லி: “1992-ல் பாபர் மசூதி, 2022-ல் கியான்வாபி“ என உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் கலவர வழக்கில் சிக்கிய பாஜக முக்கியப் பிரமுகர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் முசாபர்நகரின் 2013 மதக் கலவர வழக்கில் சிக்கியவர் பாஜக எம்எல்ஏவாக இருந்த சங்கீத் சோம். இவர், மதநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பேச்சுகளை அவ்வப்போது அளிப்பவர். தற்போது சங்கீத் சோம், வாரணாசியின் கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் களஆய்வு மீது கருத்து கூறி உள்ளார். மீரட்டின் சர்தானா தொகுதியின் பாஜக முன்னாள் எம்எல்ஏவான அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மீரட்டில் ஒரு கோயில் விழாவில் வாரணாசியின் கியான்வாபி மசூதி விவகாரத்த்தில் சங்கீத் சோம் கூறும்போது, ”கோயிலை இடித்து அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது கியான்வாபி மசூதி. கடந்த 1992-ல் பாபர் மசூதியின் முறை வந்திருந்தது. இப்போது, வருடம் 2022-ல் கியான்வாபி மசூதியின் முறை வந்துள்ளது. படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட கோயில்களின் நிலம் திரும்பப் பெறும் வேளை வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தனது உரையின் பதிவுகளை சங்கீத் சோம், தம் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதவிவேற்றம் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சங்கீத் சோமின் பேச்சால் உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இது குறித்து மாநிலங்களவையின் முன்னாள் காங்கிரஸ் எம்பியான பிரமோத் திவாரி கூறும்போது, ”கடும் விலைவாசி உயர்வால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. இச்சூழலில், மக்கள் பிரச்சினையை பேசாமல், மதக்கலவரம் தூண்டி தேர்தல் பலன் பெற பாஜக துடிக்கிறது. பொதுமக்களின் புனிதத் தலங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறது” எனத் தெரிவித்தார்.