சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார். இந்த அமர்வில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 10ந்தேதி) முடிவடைந்தது. 22 நாட்கள் நடைபெற்ற இந்த மானிய கோரிக்கை அமர்வில், தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. 50க்கும் மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டன. இதையடுத்து இன்று தமிழ்நாடு காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடை பெற்றது. தொடர்ந்து, இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.
அப்போது, “இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். 3000 காவலர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் .கடவுச் சீட்டு விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு விண்ணப்பதாரர்கள் வர வேண்டிய நிலை மாற்றப்படும். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டம் பக்கம் நிற்க வேண்டும். காவல்துறையினர் விமர்சனங்களுக்கு இடம் தராமல் பணியாற்ற வேண்டும்.கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று கூறியவர் ஏராளமான புதிய அறிவிப்பு களையும் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக கூறிய பேரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்றும், மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.