சென்னை: தமிழ்நாட்டில், 3பெண் வழக்கறிஞர் உள்பட 19 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், கொலை, கொள்ளை, போக்ஸோ, போலி ஆவணங்கள் தயாரித்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதால், அவர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் சி.ராஜாகுமார் விடுத்துள்ள அறிக்கையில், கொலை, வன்கொடுமை, போக்ஸோ வழக்குகள், போலி ஆவணங்கள் தயாரித்து மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடு பெற்றது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, குற்ற வழக்கை மறைத்தது, பணியில் இருப்பதை மறைத்தது, சிறைத் தண்டனை பெற்றது, போதைப் பொருள் கடத்தல், போலி வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வழக்கறிஞர்கள் தொழில் புரிய தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையைச் சேர்ந்த ஆதிகேசவன், சதீஷ்குமார், முருகையன், விருமாண்டி, ஈரோடு எழிலரசன், நதியா, திருவண்ணாமலை தினேஷ்பாபு, விருத்தாச்சலம் முத்துராஜ், கன்னியாகுமரி பிரபு, திருவள்ளூர் வேலாநந்தன், ராஜேஷ்கண்ணன், திருப்பூர் பார்த்திபன், சேலம் ராஜா, நாகப்பட்டினம் ஆத்தூர் சுரேந்திரன், ஓசூர் மனோகர ரெட்டி, வி.பாரதி, கே.செல்வி, தருமபுரி பாலக்கோடு எம்.சங்கர், புதுச்சேரி அரியாங்குப்பம் ஜெ.லெனின் ஆகியோர், வழக்கறிஞர்களாக எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகக்கூடாது என்றும், வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதித்தும் பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.