3 சென்ட் நிலத்துடன் 3 பெட்ரூம் வீடு ரூ.2000… கேரளாவை அதிர வைத்த தம்பதியின் பலே கூப்பன் திட்டம்!

வீடு அல்லது நிலம் விற்க வேண்டுமென்றால் நாம் அதற்கான புரோக்கர்களை அணுகுவோம், அல்லது விளம்பரம் கொடுக்கவோ, நமக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறவோ செய்வோம். அதன் மூலம் வரும் நபர்களிடம் நமக்கு இசைந்த விலை கிடைத்தால் விற்பனை செய்துவிடுவோம். ஆனால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த அஜோய் – அன்னா தம்பதிகள் தங்கள் வீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்த அதிரடி நடவடிக்கை கேரள அரசையே அதிர வைத்திருக்கிறது.

திருவனந்தபுரம் வட்டியூர்காவைச் சேர்ந்த அஜோய் – அன்னா தம்பதியினர் வெளிநாட்டில் வேலை செய்துவந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு, பிசினஸ் செய்து நல்லவண்ணம் வாழலாம் என முடிவு செய்து ஊருக்கு வந்தனர். 45 லட்சம் ரூபாய்க்கு 3 சென்ட் நிலத்தில், 3 பெட்ரூம் கொண்ட 1500 சதுர அடி கொண்ட வீட்டை விலைக்கு வாங்கினர். அஜோய் பெயின்ட் ஷாப் பிசினஸ் தொடங்கிய கொஞ்சம் நாளிலேயே கொரோனா பரவலால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டு சுமார் 32 லட்சம் ரூபாய் கடன் ஏறியது.

அஜோய் – அன்னா தம்பதி

கடனை அடைக்க வேறு வழி இல்லாமல் தனது வீட்டை விற்க முடிவு செய்தார் அஜோய். 3 வருடத்துக்கு முன்பு 45 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டுக்கு இப்போது 55 லட்சம் ரூபாய் வரை விலை வைத்திருக்கிறார்கள். அதற்குமேல் விலை வைக்க ஆள் வரவில்லை. அந்த விலைக்கு வீட்டை கொடுத்தால் கடன் செலுத்தியதுபோக எதிர்பார்த்த அளவில் பணம் மிஞ்சாது. மீதி பணத்தில் வசிக்க சிறிய அளவிலாவது வேறு வீடு வாங்க வேண்டும் என அஜோய் நினைத்தார். இதையடுத்து நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு யோசனை அவர்களுக்கு உதித்தது.

அதன்படி, வீடும், நிலமும் விற்பதற்கு ஒரு புதிய முறையை கையாண்டனர். 2000 ரூபாய் மதிப்புள்ள 3700 கூப்பன்களை அச்சிட்டு விற்பனை செய்யத்தொடங்கினார். “ரூ.2000-க்கு 3 பெட்ரூம் வீடு” என்ற தலைப்பில் பிரபலமானது கூப்பன்.

அந்த கூப்பனில் 3 சென்ட்டில் 1500 சதுர அடி உள்ள வீடு பரிசு. அக்டோபர் 17-ம் தேதி குலுக்கல் எனக் குறிப்பிட்டிருந்தனர். இதுபற்றி பேசிய அஜோய், “நான் பெயிண்ட் கடை தொடங்கினேன். கொரோனா காரணமாக பிசினஸில் அடிமேல் அடி விழுந்தது. அதனால் இப்போது தனியார் பேங்கில் அக்கவுன்டன்ட்டாக வேலைக்குப் போகிறேன். எனது வீடு நான் எதிர்பார்த்த தொகைக்கு விலை போகாததால் 2000 ரூபாய் கூப்பன் அச்சிட்டு விற்பனை செய்துவருகிறேன்.

2000 ரூபாய் கூப்பன்

3500 கூப்பன்களுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. ஆனால் குலுக்கல் நடத்தி அதில் வரும் அதிர்ஷ்டசாலிக்கு வீட்டை பத்திரப்பதிவு செய்வேன். கூப்பன் மூலம் 70 லட்சம் ரூபாய் கிடைத்தால், அதில் 18 லட்சம் ரூபாய் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். கடனை அடைத்துவிட்டு மீதம் கிடைக்கும் 20 லட்சம் ரூபாயில் சிறு வீடு வாங்கி மகிழ்ச்சியாக வாழ்வோம். ஒரு வேளை எதிர்பார்த்த அளவில் கூப்பன் விற்பனை ஆகாமல் இருந்தால், கூப்பன் வாங்கியவர்களிடம் பணத்தைத் திரும்ப ஒப்படைத்து விடுவேன்” என்றார்.

சுமார் நூறுக்கும் மேல் கூப்பன் விற்பனையான நிலையில், அஜோயின் இந்தத் திட்டம் லாட்டரி டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் கவனத்துக்குப் போனது. கேரளாவில் லாட்டரியை அரசு மட்டுமே விற்பனை செய்து வருகிறது. லாட்டரி போன்ற மாடலில் வீட்டை விற்கும் முயற்சி இது. லாட்டரி போன்ற முறையில் தனிநபர்கள் குலுக்கல் நடத்தக்கூடாது என லாட்டரி டிபார்ட்மெண்ட் கூறியதுடன், காவல்துறையிலும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் அஜோயிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கூப்பன் விற்பனை மூலம் வீட்டை விற்கக்கூடாது என்பது தனக்கு தெரியாது எனவும், இந்தத் திட்டத்தை உடனே கைவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் விற்பனையான கூப்பன்களுக்கான பணத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் திரும்ப ஒப்படைப்பதாக அஜோய் தெரிவித்துள்ளார்.

ரூ.2000-க்கு 3 பெட்ரூம் வீடு என்ற அஜோயின் கூப்பன் திட்டம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.