தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை வலுப்பெற்றது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் தீவிரமடைந்தது.
அசானி புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நேற்று காலை முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழை வருகிற 13-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், மீனவர்கள் 15 ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இன்று காலை, அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதன் அருகில் உள்ள வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். இந்த புயல் தொடர்ந்து 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அசானி புயல் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அசானி புயல் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.