LSG v GT: அசைக்கவே முடியாத குஜராத் ராஜ்ஜியம்; லக்னோவை ஊதித்தள்ளி ப்ளேஆஃப்ஸூக்கு முன்னேறிய டைட்டன்ஸ்!

நடப்பு சீசனின் டான்களாக உருவெடுத்து நிற்கும் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு யார் பெரிதென அடித்துக்காட்டும் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி ரொம்பவே சுலபமாக 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. லக்னோ அணி 145 ரன்களைகூட சேஸ் செய்ய முடியாமல் 82 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது.

Hardik & Rahul

புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். ‘கொஞ்சம் அதிகமான ரன்களை எடுத்து லக்னோவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என ஹர்திக் பேசியிருந்தார். ஆனால், அவர் பேசியதற்கு தலைகீழாக குஜராத் அணியால் 150 ரன்களைகூட எட்ட முடியவில்லை. 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ஆனாலும் போட்டியை வெல்ல இந்த ஸ்கோரே போதுமானதாக இருந்தது.

குஜராத் அணி தொடக்கத்திலிருந்தே சீராக விக்கெட்டுகளை விட்டுக்கொண்டுருந்தது. பவர்ப்ளேக்குள்ளாகவே சாஹாவும் மேத்யூ வேடும் அவுட்டாகி வெளியேறியிருந்தனர். மோஷின் கான் குட்லெந்த்தில் டைட்டான லைனில் வீசியபந்தை சரியாக ஆட முடியாமல் திணறி மிட் ஆனில் கேட்ச் ஆக கொடுத்தார் சாஹா. ஆவேஷ் கானின் பந்தில் ஒரு ஸ்கூப் ஷாட் ஆட முயன்று மேத்யூ வேட் எட்ஜ்ஜாகி வெளியேறினார். நம்பர் 4 இல் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா சில ஓவர்களை க்ரீஸில் செலவழித்தார். ஆனால், பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. 13 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து ஆவேஷ் கானின் பந்தில் கொஞ்சம் ஒயிடான டெலிவரியில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆகியிருந்தார். முதல் 10 ஓவர்களில் குஜராத் அணி 59 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

சுப்மன் கில்

ஒரு முனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்திருந்தாலும் இன்னொரு முனையில் சுப்மன் கில் நின்று நிதானமாக பெரிய இன்னிங்ஸை ஆடியிருந்தார். ஓப்பனிங்கில் இறங்கியவர் கடைசி வரை நாட் அவுட்டாக நின்று 49 பந்துகளில் 63 ரன்களை எடுத்திருந்தார்.

கடந்த சில சீசன்களை விட இந்த சீசனில் சுப்மன் கில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடி வருகிறார். இதற்கு சுப்மன் கில் டாட் ஆடும் பந்துகளின் எண்ணிக்கையை முன்பை விட குறைத்திருப்பது மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தப் போட்டியிலும் சுப்மன் கில் எதிர்கொண்டிருந்த 49 பந்துகளில் 8 பந்துகளை மட்டுமே டாட் பால்களாக ஆடியிருந்தார். மீதியிருந்த 41 பந்துகளிலும் ஸ்கோர் செய்திருந்தார். பிட்ச் மந்தமாக இருந்தது. பவுண்டரிகள், சிக்சர்கள் அடிப்பது ரொம்பவே கடினமாக இருந்தது. ஆனாலும், சுப்மன் கில் தொடர்ந்து ஸ்கோர் செய்து கொண்டே இருந்தார். ஒன்றிரண்டு ரன்களாக அதிகமாக ஓடி ஓடி எடுத்தார்.

இடையில் மில்லரும் சுப்மன் கில்லுடன் சேர்ந்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் சேர்ந்து கூட்டணியாக அரைசதத்தைக் கடந்திருந்தனர். மில்லர் அவுட்டான பிறகு கடைசிக்கட்டத்தில் ராகுல் திவேதியா கொஞ்சம் அதிரடியாக ஆடிக்கொடுத்தார். 16 பந்துகளில் 22 ரன்களை அடித்திருந்தார். ஹோல்டர் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார். கில்லின் பொறுப்பான ஆட்டமும் மில்லரின் ஒத்துழைப்பும் திவேதியாவின் அதிரடியும் குஜராத் அணியை 144 ரன்களை எட்ட வைத்தது. பிட்ச் என்னதான் மந்தமாக இருந்தாலும் 145 என்பது ஒரு சுமாரான டார்கெட்டே. லக்னோ மாதிரியான வலுவான பேட்டிங் லைன் அப்பை கொண்ட அணி சரியான திட்டமிடலுடன் இந்த டார்கெட்டை எளிதில் எட்டியிருக்க முடியும். ஆனால், லக்னோ அதை செய்ய தவறியது. ரொம்பவே மோசமாக ஆடி 82 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது.

KL Rahul

லக்னோ அணியின் முக்கியமான விக்கெட்டுகளான ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், டீகாக் இருவருமே பவர்ப்ளேக்குள்ளாகவே அவுட் ஆகி லக்னோவின் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

யாஷ் தயாளின் பந்தில் ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு அடுத்த பந்திலும் ஒரு பவுண்டரிக்கு முயன்று வட்டத்திற்குள் நின்ற ஃபீல்டர்களை க்ளியர் செய்ய முடியாமல் டீகாக் 10 ரன்களிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார். ஷமி வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 டாட்களை எதிர்கொண்டுவிட்டு ஐந்தாவது பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கே.எல்.ராகுல் கேட்ச் ஆனார். ஷமி ஸ்லாட்டில் ஒரு பந்தை கூட வீசாமல் குட் லெந்த் மற்றும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையே தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தார். ஷமியின் இந்த டெலிவரிக்களுக்கு கே.எல்.ராகுல் கடுமையாகத் திணறினார்.

ஷமிக்கு எதிராக 9 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்னை மட்டுமே எடுத்து விக்கெட்டையும் பறிகொடுத்தார். யாஷ் தயாளின் பந்தில் அறிமுக வீரர் கரண் சர்மாவும் விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர்.

Shami

பவர்ப்ளேக்குள் 3 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திவிட்டனர். பவர்ப்ளேக்கு பிறகான ஓவர்களை ஸ்பின்னர்கள் பார்த்துக் கொண்டனர். க்ரூணால் பாண்டியா, ஹோல்டர், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் ஆகியோரை ரஷீத்கான் வீழ்த்தியிருந்தார். தனது கூக்ளி மற்றும் லெக் ப்ரேக்குகளை மாறி மாறி வீசி விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். இடையில் ஸ்டாய்னிஸ் ரன் அவுட் ஆகியிருந்தார்.

இன்று குஜராத் அணிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த இடது கை ஸ்பின்னரான சாய் கிஷோர் அறிமுகமாகியிருந்தார். இரண்டு ஓவர்களை மட்டுமே அவர் வீசியிருந்தாலும் இரண்டு ஓவர்களிலும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். முதல் ஓவரிலேயே ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் ஆக்கினார். நல்ல டைட்டாக மிடில் & லெக் ஸ்டம்ப் லைனில் வீசி விட்டு கொஞ்சம் நகர்ந்து நன்றாக வெளியே திரும்பும் வகையில் வீசிய ஒரு பந்திற்கு இறங்கி வந்து ஏமாற்றம் அடைந்தார் ஆயுஷ் பதோனி. அடுத்த ஓவரில் மோஷின் கான் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆனார்.

லக்னோ 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக ப்ளேஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்றிருக்கிறது. மெகா ஏலம் முடிந்த சமயத்தில் ரொம்பவே சுமாரான ஒரு அணியாகவே குஜராத் மதிப்பிடப்பட்டிருந்தது.

Sai Kishore

On paper-லியே ஏகப்பட்ட ஓட்டைகள் தென்பட்டிருந்தன. ஆனால், களத்தில் அப்படியே தலைகீழாக மிகச்சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிமுகமான முதல் சீசனிலேயே ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்று நிற்கிறது. Well Done குஜராத் டைட்டன்ஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.