அமேசானில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1,40,000 கால்பந்து மைதானங்களுக்கு சமமான காட்டு பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏப்ரல் மாதத்தில் மழைக் காலம் என்பதால் அமேசானில் அம்மாதங்களில் மரங்களை வெட்டுவது குறைவாகத்தான் இருக்கும். எனினும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் அமேசானில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பிரேசிலின் அதிபராக உள்ள வலதுசாரி ஆதரவாளரான ஜெய்ர் போல்சனோரா ஆட்சிக்கு வந்தது முதலே பிரேசிலில் காடழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அவர் பதவி எற்றதுமுதல் அங்கு காடழிப்பு என்பது சுமார் 75%ஆக அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடுகள் சுமார் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு அழிக்கப்பட்டுள்ளது சூழியல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகளை கவலையடையச் செய்துள்ளது.
இதுகுறித்து வோல்ட் வைல்ட்லைஃப் தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்த மாரியானா நேபோலிடானா பேசும்போது, “ ”ஏப்ரலில் மிக அதிக எண்ணிக்கையில் காடழிப்பு நடந்துள்ளது. இது மாபெரும் எச்சரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு தொடக்கத்திலே சூழியல் ஆர்வலர்கள் பிரேசிலில் நடக்கும் காடழிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் பூர்வகுடிகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துப்படுகிறது.
இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .
40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.