அமேதி: “இஸ்ரோவை பார்வையிட ஏற்பாடு செய்வதாக அமேதி மாணவியிடம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, ஜெக்திஷ்பூர் பாலிடெக்னிக் மாணவி நீது மவுர்யாவிடம், வருங்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறாய் என அமைச்சர் கேட்டார். அதற்கு அந்த மாணவி, விஞ்ஞானியாகி இஸ்ரோவில் பணிபுரிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, “மாணவி நீது விஞ்ஞானியாக விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த மாணவியை அடுத்த மாதம்நான் இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்வேன். வரும் காலத்தில் அமேதி மக்களுக்கு நீது பெருமையை தேடித்தருவார்” என்றார்.