அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்- பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

புது டெல்லி:
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
இந்த விசாரணையில் அரசமைப்பில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதத்தில் ஈடுபட்டது. அதில் மத்திய அரசு கூறியதாவது:-
மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டுமே முடிவெடுக்கலாம். பேராறிவாளனின் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் வருகிறது. இதனால் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. சட்டப்பிரிவுகள் பொதுவாக இருந்தாலும், எந்த விசாரணை அமைப்பு என்பதை பொறுத்தே அதிகாரம் அமையும்.
இவ்வாறு மத்திய அரசு வாதிட்டது.
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:-
இந்திய குற்றவியல் சட்டத்தின் 432, மற்றும் 161 ஆகிய பிரிவுகளுக்கிடையே என்ன வேறுபாடுகள் உள்ளன? பேரறிவாளன் வழக்கில், 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை. ஆளுநர் எந்த விதிகளின் அடிப்படையில் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்?  அமைச்சரவை முடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை தெளிவுபடுத்துங்கள். பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் நேரத்தை வீணடிக்கப்படுகிறது. 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மன்னிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா? ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிடவேண்டும்,  ஆளுநருக்காக நீங்கள் ஏன் வாதாடுகிறீர்கள்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.
கடந்தமுறை வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் தொடர்பாக மத்திய அரசின் முடிவு என்ன? இந்திய குற்றவியல் வழக்குகளில் முடிவெடுக்க, குடியரசு தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா? கொலை குற்ற வழக்குகளில் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதா? கொலை குற்ற வழக்குகளில் வழக்குகளில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவதுபோல் இருக்கிறது. அப்படி என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களின் கருணை மனுக்கள் எல்லாம் என்னவாகும்?
இவ்வாறு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வாதம் குறித்து தமிழக அரசு கூறியதாவது:-
ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. சிஆர்பிசி சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரத்தை வழங்கவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை தமிழகத்தில் நடைபெற்றதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும்.
கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறு தமிழக அரசு வாதிட்டுள்ளது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.